இந்தியா ‘வேகம்’... வங்கம் ‘சோகம்’ * ஷமி அபார பந்து வீச்சு | நவம்பர் 14, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா ‘வேகம்’... வங்கம் ‘சோகம்’ * ஷமி அபார பந்து வீச்சு | நவம்பர் 14, 2019

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இந்துாரில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மோமினுல் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த், உமேஷ், ஷமி என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்தனர்.

‘வேகங்கள்’ நெருக்கடி

வங்கதேச அணிக்கு துவக்கத்திலேயே இந்திய அணியின் ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். ஆடுகளமும் சாதகமாக அமைய, ரன்கள் எடுக்க வங்கதேச வீரர்கள் திணறினர். நான்காவது ஓவரில்தான் ரன் கணக்கை ஆரம்பித்தது வங்கதேசம்.

உமேஷ் பந்தில் இம்ருல் கெய்ஸ் (6) சிக்கினார். இஷாந்த் வீசிய அடுத்த ஓவரில், ஷாத்மன் (6) ஆட்டமிழக்க, அணி தடுமாறியது. முகமது மிதுனை (13) வெளியேற்றினார் ஷமி. கேப்டன் மோமினுல், முஷ்பிகர் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. உமேஷ் பந்துவீச்சில் மோமினுல் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். இஷாந்த் பந்தை முஷ்பிகுர் பவுண்டரிக்கு விரட்டினார். இவர்களை பிரிக்க, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினை அழைத்தார் கேப்டன் கோஹ்லி.

அஷ்வின் அசத்தல்

நான்காவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தபோது, அஷ்வின் பந்தில் மோமினுல் (37) அவுட்டானார். இவரிடமே மகமதுல்லாவும் (10) சிக்கினார். இதன்பின், சரிவிலிருந்து வங்கதேச அணி மீளவே முடியவில்லை.

அனுபவ வீரர் முஷ்பிகுர் மட்டும் போராடினார். இந்த நேரத்தில், ஷமி ‘வேகத்தில்’ அச்சுறுத்தினார். இவரது ஒரே ஓவரில் முஷ்பிகுர் (43), மெகதி (0) அடுத்தடுத்து வெளியேறினர். லிட்டன் (21) உள்ளிட்டோர் விரைவில் திரும்ப, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஷமி 3, அஷ்வின், இஷாந்த், உமேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

புஜாரா நம்பிக்கை

முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ரோகித் (6) ஏமாற்றினார். மயங்க் அகர்வால், புஜாரா ஜோடி எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தது.

தஜில் பந்துவீச்சில் புஜாரா மூன்று பவுண்டரி அடித்தார். எபாதத் பந்தை மயங்க் அகர்வால் பவுண்டரிக்கு விரட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து, 64 ரன்கள் பின்தங்கி இருந்தது. மயங்க் அகர்வால் (37), புஜாரா (43) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

நேற்று மோமினுலை வீழ்த்திய அஷ்வினுக்கு, சொந்தமண்ணில் 250வது டெஸ்ட் விக்கெட் ஆக அமைந்தது. இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய பவுலர்கள் பட்டியலில், இலங்கையின் முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் அஷ்வின். இருவரும் 42 போட்டிகளில் இதை எட்டினர். அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் கும்ளே (43), இலங்கையின் ஹெராத் (44) உள்ளனர்.

* இந்திய பவுலர்கள் அடிப்படையில், கும்ளே (350 விக்.,), ஹர்பஜனுக்குப் (265) பின், சொந்தமண்ணில் 250வது விக்கெட் சாய்த்த மூன்றாவது இந்திய பவுலர், சர்வதேச அளவில் 10வது பவுலர் ஆனார் அஷ்வின்.

 

10 ரன், 5 விக்.,

வங்கதேச அணி முதல் இன்னிங்சில் நேற்று ஒரு கட்டத்தில் 140/5 ரன் என்ற நிலையில் இருந்தது. திடீரென சொதப்பிய இந்த அணி, அடுத்த 10 ரன் எடுப்பதற்குள், 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

 

பீல்டிங் ஏமாற்றம்

இந்திய வீரர்களின் பீல்டிங் ஏமாற்றம் அளித்தது. உமேஷ் வீசிய 22.1 வது ஓவரில் முஷ்பிகுர் தந்த ‘கேட்ச்’ வாய்ப்பை கோஹ்லி கோட்டை விட்டார். அஷ்வின் பந்தில் (26.1வது) முஷ்பிகுர் கொடுத்த ‘கேட்சை’ ரகானே தவறவிட்டார். நேற்று மட்டும் ‘சிலிப்’ பகுதியில் மட்டும் நான்கு கேட்ச் வாய்ப்புகள் நழுவின.

 

அம்பயர் எச்சரிக்கை

இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ், 11வது ஓவரை வீசியபோது, ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை மிதித்தார். இதனால், கள அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,) எச்சரித்தார். இதைப்போல, இஷாந்த் சர்மாவும் இரண்டு முறை (55, 37வது ஓவர்) எச்சரிக்கப்பட்டார்.

 

முதல் முறை

இந்திய வீரர் ரோகித் சர்மா, டெஸ்ட் அரங்கில் துவக்க வீரராக நேற்று முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் (6) ஆட்டமிழந்தார். இதற்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சமீபத்திய புனே டெஸ்டில் 14 ரன்னுக்கு அவுட்டானார்.

மூலக்கதை